Monday, 11 March 2013

விட்டு விட்டோம்


எங்கள் தோட்டத்திலே !
மரம் நட்டோம்
செடி நட்டோம்
அவரைக்காய் கொடி நட்டோம்
எம்பெருமானே !
எங்கள் உள்ளத்திலே
நல்லெண்ணம் மட்டும்
நட்டுவிட மறந்துவிட்டோம் பெருமானே !

ஊரெல்லாம் கால்களை ஓட விட்டோம்
ஓடத்திலே கப்பல் விட்டோம்
சோகத்திலே கண்ணீர் விட்டோம்
அரைத்துண்டு பீடியிலே புகை விட்டோம்
எம்பெருமானே !
சுயநலத்தால் , உண்மையையும் சேர்த்து
விட்டு விட்டோம் பெருமானே !

வானத்திலே பறந்து விட்டோம்
நிலவுக்கே போய் விட்டோம்
உலகெங்கும் சுற்றி விட்டோம்
சாதனைகள் பல புரிந்து விட்டோம்
எம்பெருமானே !
ஆசைக்கு மட்டும்
அணை கட்ட மறந்து  விட்டோம் பெருமானே !

கோடி பணம் சேர்த்து விட்டோம்
கட்சி , மாநாடு கூட்டி விட்டோம்
கல்வித் தரம் உயர்த்தி விட்டோம்
சலுகைகள் பல கெடுத்து விட்டோம்
எம்பெருமானே !
வறுமையை மட்டும்
இன்னும் இருக்க விட்டோம் பெருமானே !

காலையிலே தூக்கம் விட்டோம்
வேலைக்கு ஓட்டம் விட்டோம்
நேரத்திற்கு உணவு மறந்து விட்டோம்
உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து விட்டோம்
எம்பெருமானே !
உள்ளத்தில் நிம்மதியையும் விட்டு விட்டோம் பெருமானே !

இப்படியே
விட்டதெல்லாம் சேர்த்து விட
மறந்து விட்டோம் பெருமானே !              

No comments:

Post a Comment